தமிழகம்

சிகிச்சை முடிந்து கருணாநிதி வீடு திரும்பினார்: காவேரி மருத்துவமனை அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று இரவு வீடு திரும்பினார்.

திமுக தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக கடந்த இரு மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், ஊட்டச் சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 1-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்றிரவு வீடு திரும்பி னார்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஊட்டச்சத்து, நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டதால், இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

முழு ஓய்வு

அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் முழு ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை தொடர்ந்து மதிப்பீடு செய்வதுடன், தேவை யான மருத்துவ மற்றும் செவிலிய உதவிகளை அவரது வீட்டிலேயே காவேரி மருத்துவ மனை அளிக்கும்” என்று செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT