தமிழகம்

தருமபுரி அருகே தடங்கம் கிராமத்தில் ஜன.21-ல் ஜல்லிக்கட்டு போட்டி

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி அடுத்த தடங்கத்தில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடர்பாக ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தடங்கம் பகுதியில் உள்ள பி.எம்.பி கல்லூரி வளாகத்தில், வரும் 21-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து விழாக்குழுவினர், துறை அலுவலர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: தருமபுரியை அடுத்த தடங்கம் கிராமத்தில் நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை, தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்த வேண்டும். மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை கால்நடை பராமரிப்புத் துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

காளை உரிமையாளர் மற்றும் உதவியாளருக்கு ஜல்லிக்கட்டு விழாக்குழு சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சி வளாகத்தில் நுழைய அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே காளை, அதன் உரிமையாளர், உதவியாளர் உள்ளிட்ட விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் வரையும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் வரையும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. துறை அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் அரசு அறிவுறுத்தும் விதிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கரோனா விதிகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பழனிதேவி, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் சாமிநாதன், ஏடிஎஸ்பி அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT