திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மதுபோதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்து வைத்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.15லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மதுபோதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திறந்து வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் நாசர், “திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், திருவள்ளூர் மாவட்டத்தில் திருநங்கைகள் 512 பேர் பயனடைந்து வருகின்றனர்“ என்றார்.
மேலும், புறநோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்ததன் அடையாளமாக திருநங்கைகள் 12 பேருக்கு புறநோயாளிகள் பிரிவு அனுமதி அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி சந்திரன், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் அரசு ஸ்ரீ வத்சன், தலைமை குடிமை மருத்துவர் விஜயராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.