தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு நேற்று 52-வது பிறந்தநாள். வறட்சி, புயல், பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றால் விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வாசனின் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும், ஏழை, எளியவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிகளை நடத்துமாறும் தமாகா மூத்த துணைத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமை ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘தலைமைச் செயலகத்தில் நடந்த வருமான வரி சோதனை குறித்தும், இது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அளித்துள்ள பேட்டி குறித்தும் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும். தலைமைச் செயலகத்தில் துணை ராணுவப் படை நுழைய யாரிடம் அனுமதி பெறப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள சூழலைப் பயன்படுத்தி பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. மதவாத பாஜகவை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்’’ என்றார்.
ஜி.கே.வாசனின் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் அவருக்கு தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்த நாளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்குச் செல்வதை வாசன் வழக்கமாகக் கொண்டுள்ளார். அதுபோல இந்த ஆண்டும் குடும்பத்துடன் சொந்த கிராமத்தில் தங்கினார்.