காவிரி நடுவர் மன்றக் கூட்டம் 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடந்தது. கூடுதல் தண்ணீர் கேட்டு தமிழகம் தாக்கல் செய்த மனுவைப் பெற்ற காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற வழக்கை முடித்துவிட்டு வரும்படி அறிவுரை வழங்கி உள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பல்பீர் சிங் சவுகான் தலைமையில் காவிரி நடுவர் மன்றம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் கூடியது. காவிரி நடுவர் மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழகத்துக்கு கூடுதலாக 25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என கோரியிருந்தது.
கர்நாடகம் எதிர்ப்பு
கர்நாடகம், கேரளம், புதுச்சேரி சார்பிலும் விளக்கங்கள் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந் தது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடந்த காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில் தமிழகம் உட்பட நான்கு மாநிலங்கள் சார்பிலும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூடுதல் நீர் கேட்டு தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு கர்நாடகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி சவுகான் கூறியபோது, ‘நான்கு மாநிலங்களின் மனுக்களையும் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கத் தயார். ஆனால் நாங்கள் உத்தரவு பிறப்பித்ததும் அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு செல்கிறீர்கள்.
உச்ச நீதிமன்றத்துக்கு போக மாட்டோம் என்று உத்தரவு அளித்தால் இப்போதே முடிவெடுத்து அறிவிக்கத் தயார். மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்கிறேன். உச்ச நீதிமன்ற வழக்கை முடித்துக்கொண்டு வாருங்கள்’ என்றார்.
தமிழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வினோத் பாப்தே, உமாபதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பளிக்க மனு தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்தனர்.
கர்நாடகம் சார்பில் ஆஜரான மோகன் கடார்கி கூறும்போது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது நடுவர் மன்றம் உத்தரவு பிறப் பிப்பது முறையற்றது என்றார்.
புதுச்சேரி ஆதரவு
தமிழகத்தின் நிலைக்கு புதுச்சேரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆதரவு தெரிவித் தனர். ‘தமிழகத்துக்கு தண்ணீர் கிடைத்தால்தான் எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும்’ என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.