பொதுமக்களுக்காக வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவர் செய்த பணிகள், ஆற்றிய தொண்டுகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவு குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுகவினுடைய அசைக்க முடியாத தொண்டர்களால் அன்பு பாராட்டப்பட்டு, 'புரட்சித் தலைவி' என்றும் 'அம்மா' என்றும் அன்போடு அழைக்கப்பட்டவர்.
ஜெயலலிதாவின் இழப்பு அவர் சார்ந்த இயக்கத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் ஏன் இந்தியாவிற்கும், உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.
நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சி தலைவராக, தமிழக முதல்வராக பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி, ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து, செயலாற்றி, தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே பணியாற்றியவர்.
குறிப்பாக தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளான காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவற்றிற்கு நீதிமன்றத்தின் வாயிலாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர். மேலும் மீனவர்களின் நலனுக்காகவும், உரிமைக்காகவும் தொடர்ந்து பாடுபட்டவர்.
சிறந்த தலைவராக, நிர்வாகியாக, எதற்கும் அஞ்சாது, எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்து முத்திரை பதித்தவர். தான் சார்ந்திருந்த இயக்கத்தை தன் இறுதி மூச்சு வரை கட்டுக்கோப்போடும், கட்டுப்பாடோடும் வைத்திருந்த சிறப்பு ஜெயலலிதாவுக்கு உண்டு. கலை உலகிலும், அரசியல் உலகிலும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைந்து முத்திரை பதித்திருப்பது காலத்தால் அழியாதது. மேலும் ஆன்மீகத்திற்கு இவர் ஆற்றிய தொடர் பணி மிகுந்த பாராட்டுக்குரியது.
பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் - ஆகியோர் வழியில் தமிழ் மொழிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் தொடர்ந்து போராடியவர். நம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர்.
குறிப்பாக மூப்பனார், ஜெயலலிதாவைப் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்பவர் என்று பெருமையாக கூறியதை இந்த நேரத்தில் நினைவு கூற விரும்புகிறேன்.
அனைவரிடமும் அன்போடு பழகக் கூடியவர். எதையும் எதிர்த்துப் போராடும் வல்லமை படைத்த பெண்மணியாக வாழ்ந்து, பெண் உரிமைக்காகவும், சாதாரண தொண்டனுக்கும் பெரும் பொறுப்பை கொடுத்து ஜனநாயகத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி, லட்சோப லட்சம் தொண்டர்களின் இதயத்தில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு இடம் பிடித்தவர். இவ்வாறு இயக்கத்திற்காகவும், பொது மக்களுக்காகவும் வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தாலும், அவர் செய்த பணிகள், ஆற்றிய தொண்டுகள் என்றும் நிலைத்து நிற்கும்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தாருக்கும், தமிழக மக்களுக்கும், அவர் சார்ந்திருந்த இயக்கத்திற்கும், அதன் முன்னணி தலைவர்களுக்கும், லட்சோப லட்சம் தொண்டர்களுக்கும் தமாகா சார்பில் கனத்த இதயத்தோடு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறை அருளை வேண்டுகிறேன்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.