பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மத்திய அரசின் எந்த நோக்கமும் நிறைவேறாது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பணமதிப்பு இழப்பு பொருளாதாரத்தை முடக்கிய பொறுப்பற்ற செயல்’ என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
பணப்புழக்கம் இருந்தால்தான் பொருளாதாரம் இயங்கும். பணப்புழக்கம்தான் பொருளாதாரத்தின் நிலையை தீர்மானிக்கும். ஆனால், தற்போது புதிதாக வெளியிட்டுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 5 லட்சம் கோடி அளவுக்கு அச்சிட்டுள்ளனர். 15.44 லட்சம் கோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இதில், 10 லட்சம் கோடி அளவுக்கு வங்கிகளுக்குள் வந்துவிடும். மீதம் 5.44 லட்சம் கோடி வராது. அதை கறுப்பு பணமாக அறிவித்துவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தனர். ஆனால், தற்போதுள்ள நிலைமையை பார்த்தால் 15.44 லட்சம் கோடியும் வங்கிக்குள் வந்துவிடும்போல் இருக்கிறது. மேலும், கடந்த 45 நாட்களில் 62 முறை வங்கியில் பணம் எடுப்பது, செலுத்துவது குறித்த விதிகளை மாற்றியுள்ளனர். மக்கள் தொகையில் மொத்தம் 45 கோடி பேர் அன்றாடம் சம்பாதிப்பவர்களாக உள்ளனர். அவர்கள் வேலையிழந்து தவித்துவருகின்றனர். கறுப்பு பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இதில் எந்த நோக்கமும் நிறைவேறாது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மட்டும் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. கறுப்பு பணத்துக்கான தேவை இருக்கும்வரை அதன் விநியோகம் இருக்கும். அதற்கு முதலில் ஊற்றுக்கண்ணை தடுக்க வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, மூத்த தலைவர் குமரி அனந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.