சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 71 ரயில் நிலைய வளாகங்களில் 112 ஏடிஎம்கள் திறக்க தெற்கு ரயில்வே டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், தினமும் 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். சென்னை, புறநகர் பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், மின்சார ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சென்ட்ரல், எழும்பூர், தாம் பரம் போன்ற முக்கிய ரயில் நிலை யங்களைத் தவிர, பெரும்பாலான மின்சார ரயில் நிலைய வளாகத்தில் போதிய அளவில் ஏடிஎம் வசதிகள் இல்லை. குறிப்பாக மத்திய அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு, பெரும்பாலான ஏடிஎம்கள் மூடியே இருக்கின்றன. இதனால், பயணிகள் அவசர தேவைக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட் டபோது, அவர்கள் கூறிய தாவது:
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இங்குள்ள ஏடிஎம் களில் பணம் இருப்பு வைக்க வும், நடமாடும் ஏடிஎம் வசதியை கையாளவும் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற னர். சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிய ஏடிஎம்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான டெண்டர் அறிவிப்பு கடந்த 21-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை, சென்ட்ரல், எழும்பூர், பல்லாவரம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம், வண்டலூர், மறை மலைநகர், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், காஞ்சிபுரம், காட்பாடி உட்பட 71 இடங்களில் 112 ஏடிஎம்கள் திறக்க உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.