தமிழகம்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் பேச்சு கோழைத்தனமானது: ஜெயக்குமார் ஆவேசம்

செய்திப்பிரிவு

சென்னை: "யாருக்குமே தெரியாமல் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை அடையாளம் காட்டியது அதிமுக. அவ்வாறு அடையாளம் காட்டிய கட்சியின் மறைந்த தலைவர் குறித்து இவ்வாறு பேசியது கோழைத்தனமான செயல்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஜன.6) சந்தித்தார். அப்போது அவரிடம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேசியிருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "இது தொடர்பாக
ஏற்கெனவே எனது ட்விட்டர் பக்கத்திலேயே கண்டனங்களை பதிவிட்டுவிட்டேன். பொதுவாகவே, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசக் கூடாது. அதுவொரு பண்பாடற்ற செயல்.

எனவே கே.கே.எஸ்.எஸ்.ஆரை, ஒரு பண்பாடற்ற, பண்புகள் இல்லாதவராகவே பார்க்கிறேன். காரணம், ஒரு மறைந்த தலைவர் குறித்து இவ்வாறு பேசியிருக்கிறார். ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது இதைச் சொல்லியிருக்க வேண்டும். அவர் மறைந்த பிறகு, இவ்வாறு பேசுவது ஒரு கோழைத்தனமான செயலாகத்தான் நான் பார்க்கிறேன்.

இவர் குடும்பத்துடன் சென்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் காலில் விழுந்தார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கேத் தெரியும். இதுதான் இப்போது சோஷியல் மீடியாவிலும் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. யாருக்குமே தெரியாமல் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரை அடையாளம் காட்டியது அதிமுக. அவ்வாறு அடையாளம் காட்டிய கட்சியின் மறைந்த தலைவர் குறித்து இவ்வாறு பேசியது கோழைத்தனமான, மிருகத்தனமான செயல். நிச்சயமாக அவரை தமிழ்நாட்டு மக்களும், அதிமுக தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

முன்னதாக திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியிருந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஜெயலலிதாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி நாட்டை நாசமாக்கியதில் தனக்கும் ஒரு பங்கு உண்டு. அந்த பாவத்தின் பலனை 10 ஆண்டு காலம் அனுபவித்ததாக கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT