ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடை நீங்க வேண்டி அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக பொதுமக்கள் மகா ருத்ர யாகம் நடத்தினர்.
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு சிறப்பு வாய்ந்தது. இந்த ஜல்லிக்கட்டு உச்ச நீதிமன்றத் தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இவ்வழக்கில் இதுவரை தீர்ப்பு வெளியாகாததால், வரும் பொங்கல் பண்டிகைக்கும் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் அலங்காநல்லூர், மதுரை உட்பட பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தடையை நீக்க பல்வேறு வழிகளில் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைக்காததால், மகா ருத்ர யாகம் நடத்த அலங்காநல்லூர் மக்கள் திட்டமிட்டனர்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு திடலில் உள்ள வாடிவாசல் முன்பாக அமைக்கப்பட்ட சிறப்பு யாக குண்டத்தில் நேற்று முன்தினமே பூஜைகள் தொடங்கின. மகா ருத்ர யாகம் நேற்று காலை நடந்தது. இதில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யாக குண்டத்தில் வைக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு முனியாண்டி, காளியம்மன், முத்தாலம்மன், அய்யனார், கருப்பசாமி உள்ளிட்ட கோயில்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. தடையை நீக்க வல்லது மகா ருத்ர யாகம் என்பதால், இதை நடத்தியதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.