வார்தா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை செய்திட திமுகவினருக்கு, அக்கட்சியின் பொருளாளர் மு.க,ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தை தாக்கிய வார்தா புயல் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி 10-க்கும் மேற்பட்டோரை பலியாக்கி இருப்பதுடன், பெரும் துயத்தையும் உருவாக்கி உள்ளது.
புயல் தாக்கிய பகுதிகள் மொத்தமாக முடங்கியுள்ளது. புயல் மற்றும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பாதுகாப்பு காரணங்களுக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கும் திமுகவினர் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகளுடன் இணைந்து தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும், பாதுகாப்பு பணிகளில் உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வார்தா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளாகியுள்ள சூழ்நிலையில் மின்சாரம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் விரைந்து கிடைத்து மக்கள் இயல்பு நிலை திரும்ப அதிமுக அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
புயலால் இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தன்னால் இயன்ற உதவிகளை செய்து துணை நிற்கும் என்றும் உறுதி கூறுகிறேன்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.