தமிழகம்

புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு: மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்போம் - மத்தியக் குழு தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூரில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினர் நேற்று 2-வது நாளாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம் என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

வங்கக்கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த டிசம்பர் 12-ம் தேதி சென்னை அருகே கரையைக் கடந்தது. அப்போது வீசிய சூறாவளி காற்றால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே, கடந்த 19-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து புயல் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.22,573 கோடி வழங்க வேண்டும் என கேட்டு மனு அளித்தார். மேலும் உடனடியாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கவும், சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, மத்திய உள்துறை இணைச் செயலாளர் பிரவீன் வசிஷ்டா தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில், சென்னையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளும் இடம் பெற்றனர். இக்குழுவினர் கடந்த 27-ம் தேதி இரவு சென்னை வந்தனர். நேற்று முன்தினம் (28-ம் தேதி) காலை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து சென்னை தி.நகர், கிண்டி, வண்டலூர், பல்லா வரம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, புயல் சேதங்களை மதிப்பீடு செய்தனர். பல்லாவரம், கிண்டி ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சிகளையும் பார்வையிட்டனர்.

இரண்டாவது நாளாக நேற்றும் ஆய்வை மேற்கொண்டனர். நேற்று காலை ராயபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாலையில் ஆய்வை முடித்துக் கொண்டு தலைமைச் செயலகம் வந்தனர். அங்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் நிருபர்களிடம் குழுவின் தலைவர் பிரவீன் வசிஷ்டா கூறும் போது, ‘‘புயல் பாதித்த பகுதிகளை 2 நாட்களாக பார்வையிட்டோம். சேத விவரங்களை அறிக்கையாக தயாரித்து விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்’’ என்றார். ஆய்வுப் பணியை முடித்துக்கொண்டு மத்தியக் குழுவினர் நேற்றிரவு டெல்லி திரும்பினர்.

SCROLL FOR NEXT