சென்னை: மாணவ, மாணவிகளின் சத்துணவு திட்டத்துக்கும், ரேசன் கடைகளில் பொது விநியோகத்துக்கும் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னையில் இருந்து கிடைக்கும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளன. அவற்றை மீட்கவும், தமிழகத்தில் 11 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்துவரும் விவசாயிகளை ஆதரிக்கவும்,ரேசன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், சத்துணவில் தேங்காய் பால் போன்றவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பாஜக விவசாய அணி சார்பில் நடந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும், தேங்காய்க்கு சரியான விலை இல்லைஎன்று, தென்னை விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள்உற்பத்தி செய்யும் தேங்காய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை தமிழக அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடையில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: எனவே, தமிழகத்தில் உள்ள பல லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட, தென்னை விவசாயம் செழிக்க, பொங்கல் தொகுப்பில், தேங்காயும் சேர்த்து வழங்குவதோடு, தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளான, தேங்காய் கொள்முதல், கொப்பரை தேங்காய் விலை ஆகியவற்றை உயர்த்தி அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
மேலும், பாமாயில் விநியோகத்தை குறைத்து, தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளின் சத்துணவுத் திட்டத்துக்கும், ரேசன் கடைகளில் பொது விநியோகத்துக்கும் பாமாயிலுக்குப் பதில் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்த வேண்டும். தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை கூட்டுறவு சங்கங்கள்மூலம் அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.