தமிழகம்

மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை தேவை: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

எம்.நாகராஜன்

உடுமலை: உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடைப் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், மக்காச்சோளத்துக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழைக் காலங்களில் கிடைத்த மழைநீரால் பாசனப் பகுதிகளில் தேவையான தண்ணீர் கிடைத்தது. கடந்த காலகட்டங்களைவிட கூடுதல் மகசூல் கிடைத்துள்ளதாக மக்காச்சோள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சில இடங்களில் போலி விதை, படைப்புழு தாக்குதல் காரணமாக மக்காச்சோள விளைச்சல் இல்லாமல் போனது. அதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய இழப்பீடு இன்றியும், காப்பீடு உதவி கிடைக்காமலும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல பகுதிகளில் அறுவடையான மக்காச்சோளத்தை உலர வைக்க தேவையான உலர்களம் இல்லாததால், போக்குவரத்து இல்லாத சாலைகளை உலர் களமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உள்ளூரில் கோழித் தீவன ஆலை இயங்கியபோதும், அவர்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்வதில்லை. வெளி நாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. பிற மாநிலங்களில் மழை வெள்ளம் அல்லது வறட்சியால் பாதிப்பு ஏற்படும்போது உள்ளூரில் கூடுதல் விலை கிடைக்கிறது. விதைப்பு, களை, மருந்து, ஆள் கூலி, வண்டி வாடகை என ஏக்கருக்கு ரூ.40,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஏக்கருக்கு சுமார் 5 டன் வரை மக்காச்சோளம் மகசூல் கிடைக்கும். ஆனால் ஒரு குவிண்டால் விலை ரூ.2,300-க்கு மட்டும் கொள்முதல் செய்யப்படுவதால், எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை. கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென அரசுக்கு பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்றனர்.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.செந்தில்குமார் கூறியதாவது: உடுமலையில் உள்ள மையத்தில் மக்காச்சோளம் மட்டுமின்றி, எந்த ஒரு விளை பொருளையும் 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். கட்டுப்படியான விலை கிடைக்கும் வரை வைத்து விற்பனை செய்யலாம். இருப்பு வைக்கும் பொருளின் மீது உடனடியாக 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறலாம். கரோனா ஊரடங்குக்கு பிறகு தற்போதுதான் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பலனை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் ‘இ நாம்’ செயலி மூலம் மொத்த வியாபாரிகள் அல்லது நிறுவனங்களிடம் நேரடியாக விவசாயிகளே விற்பனை செய்யும் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் விவசாயிகளுக்கு நாங்கள் உதவ காத்திருக்கிறோம். கடந்த சில நாட்களாக மக்காச்சோள அறுவடைப் பணி நடைபெற்று வருகிறது.

நேற்றைய நிலவரப்படி ஒரு குவிண்டால் மக்காச்சோளம் (100 கிலோ) விலை ரூ.2,275 ஆக இருந்தது. இந்த விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கும். எதிர்பார்க்கும் விலை கிடைக்கும் வரை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மக்காச்சோளத்தை இருப்பு வைத்து, விற்பனை செய்யவும், கடனுதவி பெறவும் விவசாயிகள் முன்வரலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT