முதுமலை: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள குரும்பர்பாடி, தெப்பக்காடு உட்பட பல்வேறு இடங்களில் கடந்த 25-ம் தேதிமுதல் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் உயிரிழந்தன.
அவற்றின் சடலங்களை முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் பிரேதபரிசோதனை செய்தார். அதில், பன்றிகளின் உடலின் உட்பகுதியில் ரத்தக்கசிவு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காட்டுப்பன்றிகளின் உடல்களை வனத்துறையினர் எரியூட்டினர்., இந்நிலையில், முதுமலை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் கடந்த மாதம் 25-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் உயிரிழந்தன.
பிரேத பரிசோதனையில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சலால் அவை இறந்தது தெரியவந்தது. இதேபோல, முதுமலை வனப்பகுதியிலும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால், காட்டுப் பன்றிகள் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
இது தொடர்பாக கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் கூறும்போது, ‘‘வட மாநிலங்களில் பரவி வந்த ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல், கர்நாடகா, கேரள மாநிலங்களிலும் பரவியுள்ளது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் காட்டுப்பன்றிகளுக்கு வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியாது. உள் உறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கும்.
இதற்கு சிகிச்சையோ, மருந்துகளோ இல்லை. பன்றிகளுக்கு மட்டுமே இக்காய்ச்சல் பரவும் என கருதுகிறோம். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உயிரிழந்த காட்டுப்பன்றிகள், ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது’’ என்றார்.