சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதை யுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை 6 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திடீர் உடல்நலக் குறைவால் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, நேற்று முன்தினம் (டிச.5) இரவு 11.30 மணிக்கு காலமானார். இதை நள்ளிரவு 12.15 மணிக்கு அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் இரவு 1.30 மணியளவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 31 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றது. அதன்பிறகு நேற்று அதிகாலை 2.25 மணிக்கு முதல்வர் ஜெயலலி தாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போயஸ் கார்டனில் உள்ள அவரது வேதா இல்லத்துக்கு கொண்டு செல்லப் பட்டது. அங்கு ஜெயலலிதாவின் உடலுக்கு சம்பிரதாய சடங்குகள் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 5.47 மணிக்கு அங்கி ருந்து ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்துக்கு ஜெயலலிதாவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு விருப்பமான டாலர் செயின், விரலில் மோதிரம், கருப்பு நிற கைக்கடிகாரம், காதில் வைர மோதிரம், பச்சை நிற சேலை அணிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடல் மீது முதலில் அதிமுக கொடி போர்த்தப்பட்டது. பின்னர், தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
தங்கள் தலைவிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே ராஜாஜி அரங்கத்தைச் சுற்றியுள்ள அண்ணா சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலையில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் திரண்டனர். ஜெயலலிதா வின் உடலைச் சுற்றி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது கணவர் ம.நடராஜன், தம்பி திவாகரன், இளவரசி, அவரது மகன் விவேக் உள்ளிட்ட குடும்பத்தினர் நின்று கொண்டிருந்தனர். தமிழக அமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜாஜி அரங்கின் முன்புறம் அமர்ந்திருந்தனர்.
அஞ்சலி செலுத்த வந்த அதிமுக தொண்டர்களும் பொது மக்களும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பிரதான நுழை வாயில் வழியாக உள்ளே அனுமதிக் கப்பட்டனர். திரையுலகினர், முக்கியப் பிரமுகர்கள் வாலாஜா சாலை வழியாக ஓமந்தூரார் தோட்ட வளாகத்துக்குள் நுழைந்து, ராஜாஜி அரங்கத்தின் பின்வாசல் வழியாக வர ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜெயலலிதா உடலைப் பார்த்து பெண்களும் அதிமுக தொண்டர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
பிரணாப், மோடி அஞ்சலி
முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி | புதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்து ஆறுதல் கூறும் பிரதமர் நரேந்திர மோடி. அருகில் ஆளுநர் வித்யாசாகர் ராவ். | படங்கள்: ம.பிரபு |
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, புதுவை முதல்வர் நாராயணசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கேரள ஆளுநர் சதாசிவம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஜெயலலிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். அப்போது சசிகலாவின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டியணைத்தபடி ஆறுதல் தெரி வித்தார்
மாலை 4.20 மணியளவில் கண்ணாடி பேழையில் வைக்கப் பட்ட ஜெயலலிதாவின் உடல் முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. பின்னர் ராணுவ பீரங்கி வண்டியில் உடல் ஏற்றப்பட்டு அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத் துக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு ராணுவ வண்டியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் அமர்ந்திருந் தனர்.
இறுதி ஊர்வலம் சென்ற வழியில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று கண்ணீர் மல்க ஜெயலலிதாவுக்கு பிரியா விடை கொடுத்தனர். மாலை 4.20 மணிக்கு புறப்பட்ட இறுதி ஊர்வலம் 5.30 மணிக்கு எம்ஜிஆர் நினைவிட வளாகத்தை வந்தடைந்தது. 5.35 மணிக்கு ராணுவ பீரங்கி வண்டியிலிருந்து கண்ணாடி பேழையில் இருந்த ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள் இறக்கினர். 5.43 மணிக்கு கண்ணாடி பேழையில் இருந்து இறக்கப்பட்ட உடல் சந்தன பேழையில் வைக்கப்பட்டது.
சசிகலாவின் தலையில் கை வைத்து தேற்றுகிறார் மோடி | முதல்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. | படங்கள்: ம.பிரபு |
ஆளுநர், முதல்வர் அஞ்சலி
ராணுவ வீரர்கள் உடலை இறக்கி வைத்தவுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர், சசிகலாவின் கணவர் ம.நடராசன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 5.56 மணிக்கு ஜெயலலிதாவின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை ராணுவ வீரர்கள் உரிய மரியாதையுடன் எடுத்து, அதை சசிகலாவிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் வைணவ புரோகிதர் வழிகாட்டுதலின்படி சசிகலா, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்தனர். 6.03 மணிக்கு சந்தனப்பேழை மூடப் பட்டது. மாலை 6.06 மணிக்கு சந்தனப்பேழையை குழிக்குள் இறக்கினர். அப்போது ராணுவ வீரர்கள் குண்டுகள் முழங்க ஜெயலலிதாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சசிகலா குழிக்குள் பால் ஊற்றினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் பால் ஊற்றினர். பின்னர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட குழி மணலால் மூடப்பட்டது. இறுதிச் சடங்கில் பங்கேற்ற லட்சக்கணக் கான மக்களால் மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலை மக்கள் வெள்ளம்போல காட்சியளித்தது.