‘வார்தா’ புயலால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் மீனவர்களின் 15 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தங்களுக்கு தொகுப்பு வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த திங்களன்று வீசிய புயலால் மீனவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்து தொழில் பாதிப்படைந்ததோடு அவர்களுடைய வீடுகளும் சேதம் அடைந் துள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ கிராம பகுதிகளில் மீனவர்கள் வசித்து வருகின்ற னர். இவர்கள் ஓலை, கல்நார் மற்றும் ஓட்டு வீடுகளில் வசித்து வருகின்றனர். புயலில் இவர்களுடைய வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து, அகில இந்திய மீனவர் சங்க செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி கூறும் போது, “சென்னையில் சிங்காரவேலர் குப்பம், புதுமனைக் குப்பம், காசிபுரம் ஏ, பி பிளாக், ஜி.ஜி.காலனி, எம்ஜிஆர் நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோவளம், நெமிலி, செம்மஞ்சேரி, காட்டுக் குப்பம், சின்னக் கடலூர், பெரிய கடலூர், ஈஞ்சம்பாக்கம், நொச்சிக்குப்பம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நல்லதண்ணீர் ஓடைக் குப்பம், அன்னை சிவகாமி நகர், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் முகத்துவார குப்பம், சின்ன மற்றும் பெரிய குப்பம், பழவேற்காடு பகுதியில் உள்ள 18 தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
அண்மையில் வீசிய புயல் காரணமாக இந்த 3 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், தமிழக அரசு ரூ.10 கோடி மட்டுமே மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது. கூடுதல் நிதி ஒதுக்கி பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.
மீனவர் மக்கள் முன்னணி அமைப்பின் தலைவர் கோ.சு.மணி கூறும்போது, “புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக உடனடியாக வழங்க வேண்டும். மேலும், சேதமடைந்த படகுகளை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஆர்.கே.நகர் சிங்காரவேலன் நகரை சேர்ந்த சாரதா என்ற பெண்மணி கூறும்போது, “புயலில் சிக்கி மீனவர்களின் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒரே நேரத்தில் தொழிலும், வீடும் பாதிக்கப்பட்டுள்ளதால் நாங்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளோம். கடந்த ஆண்டு பெருமழையால் நாங்கள் பாதிப்படைந்தோம். இந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு அரசாங்கம் தொகுப்பு வீடுகளை கட்டித் தர வேண்டும்” என்றார்.
எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தயாளன் என்ற மீனவர் கூறும்போது, “புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதல்வர் பன்னீர்செல்வம் எண்ணூர் பகுதிக்கு வந்தார். ஆனால், அவர் மீனவர் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து பார்வையிடவில்லை. இயற்கை சீற்றங்களால் நாங்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே இப்பிரச்சினைக்கு அரசு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
இதுகுறித்து, தமிழக மீன்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அரசு தற்போது முதற்கட்டமாக மீனவர்களுக்கு ரூ.10 கோடி நிவாரணத் தொகையை ஒதுக்கியுள்ளது. மீனவர் குடியிருப்பு பகுதியில் புயல் சேதத்தின் மதிப்பு குறித்து முழுமை யாக ஆய்வு செய்த பிறகு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.