காப்புப் காடுகள் | கோப்புப் படம் 
தமிழகம்

காப்புக் காடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரசாணையை ரத்து செய்க: கட்சிகள், அமைப்புகள் முதல்வருக்கு கடிதம் 

செய்திப்பிரிவு

சென்னை: காப்புக் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணையை ரத்து செய்யக்கோரி கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் இணைந்து தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

காப்புக் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அரசாணையை ரத்து செய்யக்கோரி மதிமுக,சிபிஎம்,சிபிஐ, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்டிபிஐ, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியப் பேரியக்கம், அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கம், மே 17 இயக்கம், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைத்து முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளன.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது,"தமிழக அரசின் தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கடந்த 14.12.2022 அன்று ஒரு அரசாணையை வெளியிட்டிருக்கிறது. இந்த அரசாணையின் வாயிலாக தமிழ்நாடு சிறு கனிம சலுகை சட்ட விதிகள் 1959-ல் ( THE TAMILNADU MINOR MINERAL CONCESSION RULES) பிரிவு 36இல் உட்பிரிவு 1(A)வில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இச்சட்டத்திருத்ததின்படி காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் கனிம சுரங்கங்கள்(quarry/mine) அமைப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கடந்த 3.11.2021 அன்று அரசாணை எண் 295ன் மூலம் காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுவரை கனிம சுரங்கங்களுக்குத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

காடுகள் மற்றும் காட்டுயிர்களின் பாதுகாப்பிற்கு இந்தத் தடை ஆணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குவாரி நிறுவனங்களின் நலன் மற்றும் அரசின் வருவாயை அதிகரிப்பது எனும் காரணங்களுக்காக காப்புக்காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுவரை பிறப்பிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்திய வன மதிப்பாய்வகத்தின் தரவுகளின்படி தமிழகத்தில் 20.31% நிலப்பரப்பு மட்டுமே காட்டுப்பகுதியாக உள்ளது. அதில், மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மட்டுமே தேசிய பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் மற்றும் யானைகள் வலசை பாதைகளாக உள்ளன. இந்தத் தடை ஆணை தளர்த்தப்பட்டதால் மீதமுள்ள காப்புக் காடுகள் அனைத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் தடை ஆணை வழங்கப்பட்ட பின்னர் மட்டும் காப்புக் காடுகளின் எல்லையிலிருந்து 1 1கி.மீ. சுற்றளவிற்குள் அமைக்கத் திட்டமிடப்பட்டு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்ட 32 குவாரிகளின் விண்ணங்களை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிராகரித்திருந்தது. 500-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் மற்றும் TAMIN நிறுவனத்தின் பெருமளவிலான குவாரி மற்றும் சுரங்கங்கள் 19 குவாரிகள் உட்பட பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக அரசிற்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், எனவே பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின் நலனை காத்திட மற்றும் அரசின் வருவாயை பெருக்கிட ஏதுவாக இவ்விதியில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என அரசு தெரிவித்துள்ளது. தற்போது இத்தடை நீக்கப்பட்டிருப்பதன் மூலம் அனுமதி மறுக்கப்பட்ட குவாரிகளும் ஏற்கனெவே 1கி.மீ. சுற்றளவிற்கு செயல்பட்டு வந்த காரணத்தால் மூடப்பட்டிருந்த குவாரிகளும், சுரங்கங்களும், செங்கல் சூளைகளும் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுயிர்கள் பாதிப்புக்குள்ளாகும்.

தமிழகத்தில் காடுகளை ஒட்டியுள்ள எல்லா பகுதிகளிலும் மனித, காட்டுயிர் மோதல் நிலவுகிறது. தற்போது வனத்துறைக்கு சொந்தமான நிலம் என்று வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமல்லாது காட்டை ஒட்டிய பிற பகுதிகளையும் பல ஆயிரம் ஆண்டுகளாக காட்டு விலங்குகள் பயன்படுத்தி வருகின்றன. வனத்துறை நிலம், வருவாய்த்துறை நிலம், தனியார் நிலம் என்ற பிரிவினைகள் எல்லாம் நமக்குத்தான். நமது நிலப் பாகுபாடுகளை காட்டுயிர்கள் அறியாது. அப்படியான இடங்களில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால் விலங்குகளின் இயல்பான வலசை பாதிக்கப்பட்டு அவை விளைநிலங்களில், மனித குடியிருப்புகளிள் புகுந்துவிடும். குறிப்பாக யானைகளும் காட்டு மாடுகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். வேளாண்மையும் பாதிக்கப்படும்.

காப்புக்காடுகளுக்கு மட்டுமே விதி தளர்த்தப்பட்டிருப்பதாகவும் காட்டுயிர் சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் (elephant corridor) ஆகியவற்றில் ஒரு கிலோமீட்டர்வரை சுரங்கப்பணிகளுக்கு உள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு மலைத்தொடர்களில் பெரும்பாலும் காப்புக் காடுகளே உள்ளன. அவற்றை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ளது.

Right of Passage எனும் இந்திய யானைகள் திட்டத்தின் ஆதரவோடு தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தமிழகத்தில் யானைகள் வலசை பாதைகள் 17 மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பல பாதைகள் அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. யானைகளின் இரு பெரும் வாழ்விடங்களை இணைக்கும் குறுகிய வலசைப் பாதைகளை குறிக்கவே corridor என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை இணைப்புப் பாதைகள் எனலாம். இந்த இணைப்புப் பாதைகளுக்கு நிகராக யானைகளின் பாரம்பரிய வலசைப் பாதைகள் ( traditional migratory paths) அனைத்தும் முக்கியமானவை. அவை தடைபட்டு விடக்கூடாது.

கோவை அருகே தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக காடுகளை ஒட்டி தோண்டப்பட்ட பெருங்குழிகளால் யானைகளின் வலசை பாதிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு அங்கு சுரங்கப் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதை நாம் அறிவோம். தற்போது எல்லா இடங்களிலும் சுரங்கப் பணிகளுக்கு அனுமதித்திருப்பது வேதனைக்குரிய செய்தியாகும்.
அதுபோலவே இத்தடை நீக்கத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து காடுகளை ஒட்டி உள்ள மலைகளை சிதைத்து கற்களும் மண்ணும் அண்டை மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அவலம் இனி சட்டரீதியாகவே தொடரும் என்பது வேதனையளிக்கிறது. உச்சநீதிமன்றம் காடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அத்தீர்ப்புகளின் நோக்கங்களுக்கு எதிராக இந்த அரசாணை உள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

தமிழக அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் காட்டுயிர்கள் பாதுகாப்பிற்காக பல அக்கறையான திட்டங்களை அறிவித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. புதிதாக அகத்தியர் மலை யானைகள் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிய வகை உயிரினங்களை பாதுகாக்கும் நோக்கோடு இந்தியாவில் முதன்முறையாக தேவாங்குகள் சரணாலயம், ஆவுளியாக்கள் பாதுகாப்பு திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் நஞ்சராயன் குளம், விழுப்புரம் கழுவேலி ஆகிய பறவைகள் சரணாலயங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டதோடு 13 நீர் நிலைகள் ராம்சர் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. புதிதாக காவிரி தெற்கு காட்டுயிர் சரணாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாறு கழுகுகள், வரையாடுகள் பாதுகாப்பிற்காக சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் 260 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுவதன் மூலம் தமிழத்தில் 23.7% ஆக உள்ள காடுகள் பரப்பை 33% ஆக உயர்த்திட முதல்வர் பசுமைத் தமிழகம் இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தில் நடப்பாண்டு 2 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்தாண்டு, 7 கோடியே 50 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல்வேறு பசுமைத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு காப்புக் காடுகளை ஒட்டி குவாரிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. எனவே, தமிழகத்தின் பசுமையைக் காப்பதில் அக்கறையோடு செயல்பட்டு வரும் முதல்வர் தலையிட்டு காடுகளுக்கும் காட்டுயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடிய 14.12.2022 அன்று வெளியான அரசாணை எண் 243ஐ ரத்து செய்திட வேண்டும் என பசுமை உணர்வோடு கேட்டுக்கொள்கிறோம்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SCROLL FOR NEXT