வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரக்கோரி, பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடந்த மோசடிகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும். இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங் களுக்கு பதிலாக, வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு மிகப்பெரிய மோசடியாகும். இந்த இயந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்பதை பல உலக நாடுகள் நிரூபித் துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு மாறிவிட் டன. வடஇந்திய தலைவர்களும் வாக்குச் சீட்டு முறையே வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை இல்லாத மின்னணு வாக்குப் பதிவு முறையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டு வரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.