சென்னை: சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக, நாளை (ஜன.5) தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா, ஜன.26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர்பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணி வகுப்புமரியாதையை ஏற்பார். இதையடுத்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி, ஆண்டுதோறும் மெரினா கடற்கரையில் காந்தி சிலை முன்பாக நடைபெறும்.
ஆனால், தற்போது அங்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதால், இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியை அப்பகுதியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடியரசு தின நிகழ்ச்சியை எப்பகுதியில் நடத்துவது என்பது குறித்து தலைமைச் செயலர், பொதுத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆலோசனைநடத்தி வருகின்றனர்.
முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வேறு இடத்தில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, காமராஜர் சாலையில் விவேகானந்தர் இல்லம் அல்லது உழைப்பாளர் சிலை பகுதியில் நடத்தலாம் என இரு இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.
இப்பகுதிகளில் குடியரசு தின நிகழ்ச்சியை நடத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வந்தது. அத்துடன், நிகழ்ச்சி தொடர்பான விவரங்களும் பெறப்பட்டு, அணிவகுப்பு சென்று திரும்புவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2 இடங்களில் எங்கே விழாவை நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு நாளைஎடுக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில் நடைபெறுகிறது.
பெரும்பாலும் விவேகானந்தர் இல்லம் பகுதியே குடியரசு தின நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.