சென்னை: சென்னையில் மெரினா கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வரை 4.60 கிமீ தொலைவுக்கு ரோப்வே திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு நடத்த நிறுவனத்தை தேர்வு செய்யும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ்,பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளை ஈ்ர்க்கும் திட்டங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கவுன்சிலர்களிடம் தெரிவித்தார்.
அதன்படி, மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம்முதல் செல்பி பாய்ன்ட் வரை 3 கிமீதூரத்துக்கு ரோப் கார் அமைக்கயோசனை கூறப்பட்டிருந்தது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வுசெய்ய சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் வரை ‘ரோப்வே’திட்டத்தை செயல்படுத்த மத்தியசாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திர மாநிலம்திருப்பதி, உத்தர பிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் , மகாராஷ்டிராவில் தலா இரு இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
24 மாதங்களில் அறிக்கை: ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் கோரியுள்ளது. குறிப்பாக, சென்னை ரோப்கார் திட்டத்தில், இந்த பகுதியில் சுற்றுலா வசதிகள், தற்போது பயணிகளின் எண்ணிக்கை, அடுத்த 30 ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு எவ்வளவாக இருக்கும் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் 24 மாதங்களில் சாத்தியக் கூறு அறிக்கைமத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோப்கார் திட்டமானது பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர்வழியாக பெசன்ட் நகர் வரைகடற்கரையை ஒட்டியே ரோப்கார் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.