தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை யார் நடத்துவது? - அமைச்சர், ஆட்சியர் ஆலோசனை

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு யார் நடத்துவது என்ற பிரச்சினையால் பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியை நடத்துவதில் உள்ளூர் கிராமத்தினர், தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், காளை வளர்ப்போர் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இது தொடர்பாக 3 முறை பேச்சுவார்த்தை நடந்த போதிலும் அவை தோல்வியில் முடிந்தன.

4-வது முறையாக ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர் தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இங்கும் முடிவு ஏதும் ஏற்படவில்லை.

கூட்டத்தில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.கண்ணன் கூறியதாவது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் 10 பேரும், உறுப்பினர்களாக 60 பேரும் இருக்கிறோம். தற்போது சிலரை விழாக் குழுவில் இணைக்க வேண்டும் என கூட்டத்தில் பேசினர்.

ஆனால் அவர்களை ஆலோசனைக் குழுவில் தான் சேர்க்க முடியும் என்றோம். போட்டியை தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நடத்தாமல் வேறு யாரேனும் நடத்த முயன்றால் நீதிமன்றத்துக்குச் செல்வோம் என்றார்.

          
SCROLL FOR NEXT