தமிழகம்

மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது தாக்குதல்: நல்லகண்ணு கண்டனம்

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம், வாங்கல் என்னும் ஊரில் நடைபெறும் மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடியவர்கள் மீது, கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ள குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று நல்லகண்ணு கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட்ட அறிக்கையில், ''கரூர் மாவட்டம், காவிரி ஆற்றில் பெயரளவில் மணல் அள்ளுவதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டு ஆற்றையே முற்றாக அழிக்கும் நடவடிக்கையில் மணல் ஒப்பந்தக்காரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடம்பங்குறிச்சி, தோட்டக்குறிச்சி, நஞ்சைப் புகழூர், ஆகிய பகுதிகளில் அள்ளப்படும் இந்தக் கொடுமையை எதிர்த்து, காவிரி பாதுகாப்பு இயக்கம் ஒன்றை அமைத்து, விசுவநாதன், முகிலன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் கடந்த ஐந்து மாதங்களாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இனிமேல் புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுக்கமாட்டேன் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்த மாவட்ட ஆட்சியர், வாங்கல் என்னும் இடத்தில் மணல் அள்ளுவதற்கான புதிய அனுமதியை கொடுத்துள்ளார். இதனை எதிர்த்து கிராம மக்கள் தங்களுக்குள் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதற்காக கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் முன்னாள் அமைச்சர் சின்னசாமியும் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்தக் கூட்டத்தில் மணல் குவாரியின் அடியாட்கள் நேரடியாக புகுந்து கலவரம் செய்துள்ளனர். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூட்டம் நடத்திவிட்டு காரில் சென்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணி தலைவர் முகிலன், கே.ஆர்.சுப்ரமணியம், தமிழ்கவி ஆகிய மூவரையும் வழிமறித்து கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளனர் .

இந்த மணல் குவாரி அடியாட்களின், இந்த செயலை வன்மையாக கண்டிப்பதுடன், அடியாட்களை வைத்து கிராம மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தொல்லை தரும், மணல் குவாரி ஓப்பந்தக்காரர்கள் மீதும். அவர்களின் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நல்லகண்ணு கூறியுள்ளர்.

SCROLL FOR NEXT