அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சி.பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுக முக்கிய உறுப்பினரான சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் சந்திப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என தமிழக மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த ஜெயலலிதா, கோடிக் கணக்கான மக்களின் உள்ளங் களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆரால் தொடங்கப் பட்ட அதிமுகவை அவரது மறைவுக்குப் பிறகு ஒன்று படுத்தி, கட்டுக்கோப்போடு வலிமை மிக்க இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. அவர் உடல்நலக் குறைவால் மறைந்த பிறகு கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பது தொடர்பாக பல் வேறு வதந்திகள் வந்து கொண் டிருக்கின்றன. அதில் எந்த உண் மையும் இல்லை. சிலர் வேண்டுமென்றே தேவையற்ற வதந்திகளை பரப்பி வரு கின்றனர்.
ஜெயலலிதாவின் அடிச் சுவட்டில் நின்று அதிமுகவை கட்டிக்காக்கும் வல்லமை கொண்ட ஒருவர் விரைவில் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதிமுக ஒற்றுமை உணர்வுகொண்ட கொள்கைக் கோட்டை. எனவே, பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைவரது ஆதரவுடன் ஒருமனதாக பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவது உறுதி. இதற் காக விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.
அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட எஃகு கோட்டை. மக்கள் ஆதரவு கொண்ட இந்த இயக்கத்துக்கு வெளி யில் இருந்து யாரும் நிர்பந்தம் கொடுக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆத்மா யாரை நினைக்கிறதோ அவர்தான் அடுத்த பொதுச் செயலாளராக வருவார்.
நுரையீரலில் ஏற்பட்ட தொற்றுக்காக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு உலகத் தரத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டது. இதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் களே தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, இது தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை.
ஜெயலலிதாவின் மறை வால் அதிமுகவில் வெற்றிடம் ஏற்படவில்லை. எம்ஜிஆரின் ஆத்மாவும், ஜெயலலிதாவின் ஆத்மாவும் அதிமுகவை கட்டிக்காக்கும் வரை அதி முகவில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அடுத்து பல ஆண்டுகளுக்கு அதிமுகவை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பதை ஜெயலலிதா செயல்படுத்திக் காட்டியுள்ளார். அவரது அணுகுமுறையே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே முதல் வரும், அமைச்சர்களும் போயஸ் தோட்டத்துக்கு செல் கின்றனர். சசிகலா அதிமுகவின் முக்கிய உறுப்பினர். ஜெய லலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே பல ஆண்டுகள் வாழ்ந்தவர். எனவே, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவரை சந்திப் பதில் எந்தத் தவறும் இல்லை. அதிமுகவை பொறுத்தவரை கட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. கட்சி ஒற்றுமையாக வலுவாக உள்ளது.
போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து கட்சியின் செயற்குழு, பொதுக்குழு முடிவு செய்யும்.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.