பேரணி சென்ற இளைஞர்கள் 
தமிழகம்

பேரணியில் பெண் எஸ்.ஐ மீது தாக்குதல்: கரூரில் போலீஸ் தடியடியால் பரபரப்பு

க.ராதாகிருஷ்ணன்

கரூர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கரூர் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று (ஜன.3) தேவராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்க இரு சக்கர வாகனம் மற்றும் நடந்தும் பேரணியாக சென்றனர்.

தேவராட்டம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனம் மற்றும் நடந்தும் பேரணியாக சென்ற நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே வாகனத்தில் அதிக ஒலி எழுப்பியப்படியும், கூச்சலிட்டப்படியும் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்த அதன் சாவியை கரூர் நகர உதவி ஆய்வாளர் பானுமதி திருப்ப முயன்றுள்ளார்.

அப்போது வாகனத்தில் வந்தவர்கள் அவரின் கையைப் பிடித்து முறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீஸார் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்தவர்கள் மற்றும் கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியதில் சக்திவேல் என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தினர் சிதறி ஓடினர்.

எஸ்ஐ பானுமதி, சக்திவேல் ஆகியோர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT