தருமபுரியில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். 
தமிழகம்

பண மதிப்பிழப்பை அரசியலாக்கிய கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும்: அண்ணாமலை

செய்திப்பிரிவு

தருமபுரி: பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், பண மதிப்பிழப்பை அரசியல் ஆக்கிய கட்சியினர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும், என தருமபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.

ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை வலியுறுத்தி தருமபுரியில் நேற்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தருமபுரி-பென்னாகரம் சாலையில் மேம்பாலம் அருகே நடந்த கூட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்று பேசியது: சென்னையில் எம்.பி. கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸாரிடம் திமுக-வினர் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

உலகம் முழுக்க பெண்களுக்கு ஏதேனும் அநீதி நடந்தால் குரல் கொடுக்கும் கனிமொழி, தான் பங்கேற்ற கூட்டத்தில் நடந்த இந்த அவலத்தை ஏன் கண்டிக்கவில்லை? தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.

கொள்கை இல்லாத திமுக-வுடன் ஒருபோதும் பாஜக-வின் பயணம் இருக்காது. பாஜக-வை கிண்டல் செய்யும் திமுக தன்னுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளை விட்டுவிட்டு 2024 மக்களவைத் தேர்தலில் எங்களுடன் மோதட்டும். அந்த தேர்தலில் திமுக-வுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும். செங்கல் அரசியல் செய்யும் உதயநிதி, அவரது தாத்தா மற்றும் அப்பா ஆட்சிகளில் தருமபுரிக்கு அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டையின் செங்கல்லை காட்டுவாரா? ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி மாவட்ட வளர்ச்சிக்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.

பண மதிப்பிழப்பு நட வடிக்கையை கண்டித்து 56 பேர் தொடுத்த வழக்கில் இன்று (நேற்று) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 4 நீதிபதிகள், பண மதிப்பிழப்பு நடவடிக்கை சரியானது என்றும், அந்த திட்டத்தின் நோக்கத்தை இந்தியா அடைந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து மக்கள் மத்தியில் பொய்யை பரப்பி அச்சத்தை உருவாக்கி அரசியல் செய்த கட்சியினர் நல்லரசியலை விரும்பினால் தற்போது பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் எம்.பி-க்களை தேர்வு செய்து அனுப்பினால் தான் தருமபுரி உட்பட தமிழகத்துக்கு வளர்ச்சி ஏற்படும். தொடர் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்ட இளையோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், ஏக்கமும் உள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக-வை தவிர்த்தால் அந்த எதிர்பார்ப்பு மீண்டும் ஏமாற்றமாக மாறிவிடும்.

எனவே, தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ள ஆயிரம் ஆயிரம் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள். அடுத்த தலைமுறையை பற்றி பிரதமர் மோடியும், வாக்காளர்களாகிய நீங்களும் ஒரே மாதிரி சிந்திக்கிறீர்கள். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு மோடி தான். திமுக-வை வெல்ல சங்கல்பம் செய்து தீவிரமாக பணியாற்றுங்கள். இவ்வாறு பேசினார். கூட்டத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT