கள்ளக்குறிச்சி: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி நெடுஞ்சாலைப் பணிக்கு கையகப்படுத்திய விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும், வெளிச்சந்தை மதிப்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கம் சார்பில் நேற்று விழுப்புரம் நகராட்சித் திடலில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் அற்பிச்சம்பாளையம், சாலையம்பாளையம், ஓட்டேரிப்பாளையம், சுந்தரிப்பாளையம், நன்னாட்டாம்பாளையம், ஆனாங்கூர், சாமிப்பேட்டை, கொளத்தூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆசிரியர்கள், எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்ந்துவிட்டது. ஆனால் நெல், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தவில்லை. விவசாயிகள் தொடர்ந்து அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கு வதில் பாகுபாடு உள்ளது.
நாகை மற்றும் விழுப்புரத்தில் சதுரடிக்கு ரூ.2 ஆயிரம் வழங்கி வரும் நிலையில், ஓட்டேரிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மட்டும் சதுரடிக்கு ரூ.200 இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்?” என கேள்வி எழுப்பினார்.