காரைக்குடி: காரைக்குடி அருகே அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் 5 வகுப்புகளுக்கு ஒரே வகுப்பறை தானா? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.
காரைக்குடி அருகே உள்ள சின்ன உஞ்சனை கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் நல தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி செயல் படுகிறது. இப்பள்ளியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அங்கிருந்த ஆசிரி யர்களிடம் மாணவர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை 20 மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு வகுப்பறை உள்ளது. அதேபோல் உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 18 மாணவர்கள் படிக் கின்றனர். அவர்களுக்கும் ஒரே ஒரு வகுப்பறை மட்டுமே உள்ளது.
உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். வகுப்பறையும், ஆசிரியர்களும் இல்லாததால் மாணவர்கள் எண் ணிக்கை குறைந்து வருகிறது என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ப.சிதம்பரம் அங்கிருந்தவர்களிடம், 5 வகுப்புகளுக்கு ஒரு வகுப்பறை மட்டுமே இருந்தால் ஒவ்வொரு வகுப்புக்கும் தனித்தனியாக எப்படி பாடம் நடத்த முடியும். அப்புறம் எப்படி மாணவர்கள் பள்ளியில் சேருவார்கள். வகுப்பறையே இல்லாத பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பு தேவைதானா? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த சிலர், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்தான் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வில்லை என்று தெரிவித்தனர். இதற்கு ப.சிதம்பரம் கூறுகையில், கோழி முதலில் வந்ததா?, முட்டை முதலில் வந்ததா? என்பது போல் உள்ளது. வகுப்பறை இருந்தால்தானே மாணவர்கள் சேருவார்கள் என்று வேதனை தெரிவித்தார். மேலும் கூடுதல் வகுப்பறை கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யுமாறு மாங்குடி எம்எல்ஏவிடம் தெரிவித்தார்.