தமிழகம்

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்: பழனிசாமி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை வீட்டுக்கு அனுப்பாமல், தொடர்ந்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் 2020-ம் ஆண்டு கரோனா நோய் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத அந்த சூழ்நிலையில், தன்னலம் கருதாமல், சிகிச்சை அளிக்கும் பணியில் செவிலியர்கள் ஈடுபட்டனர்.

கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், முழு கவச உடையணிந்து, தங்களது கடமையைச் செய்தனர். ஒப்பந்த மருத்துவர்களும், ஒப்பந்த செவிலியர்களும் கரோனா நோய் தொற்றின்போது, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள்.

பிரதமர் மோடி பாராட்டு: கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில், தமிழகம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

இந்த பாராட்டுக்கு முக்கிய காரணம் முன்களப் பணியாளர்களான மருத்துவர்களும், செவிலியர்களும்தான். கரோனா நோய் தொற்றின் போது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தயங்கியபோது, சுமார் 80 முதல் 90 சதவீத கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைகளையே நாடினர்.

இவ்வாறு தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களையும், ஒப்பந்த செவிலியர்களையும், அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரையும் திமுக அரசு தவிக்கவிட்டுள்ளது. அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளுக்கு 1,820 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், கரோனா நோயாளிகளுக்காக பணியாற்றிய ஒப்பந்த மருத்துவர்களை வீட்டுக்கு அனுப்பியது திமுக அரசு. தற்போது ஒப்பந்த செவிலியர்களுக்கும் பணி நீட்டிப்பு இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

அரசாணை ரத்து: இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்த அரசாணையை உடனடியாக ரத்துசெய்து, ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், ஒப்பந்த மருத்துவர்கள், ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT