கோப்புப்படம் 
தமிழகம்

வளசரவாக்கத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடியில் 2 உயர் மட்ட பாலங்கள்: அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74.36 கோடி மதிப்பில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி, 2022-23ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தில் கூவம் ஆற்றின் குறுக்கே யூனியன் சாலையையும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனடிப்படையில், மாநகராட்சியின் சார்பில் கூவம் ஆற்றின் குறுக்கே சின்ன நொளம்பூர் பகுதியில் ஒரு உயர்மட்டப் பாலமும், சன்னதி முதல் குறுக்குத் தெருவில் மற்றொரு உயர்மட்ட பாலம் அமைக்கவும், சின்ன நொளம்பூர் பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள பாலத்திற்காக ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை, திட்ட மதிப்பீடு, வரைபடங்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் வாங்கப்பட்ட நிலங்களை நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிவுற்றவுடன் மாநகராட்சியிடம் இலவசமாக ஒப்படைக்கவும் அரசிற்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், கூவம் ஆற்றின் குறுக்கே பூந்தமல்லி நெடுஞ்சாலையையும், யூனியன் சாலையையும் இணைக்கும் வகையில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சின்ன நொளம்பூர் பகுதியில் ரூ.42.71 கோடி திட்ட மதிப்பீட்டிலும், சன்னதி முதலாவது குறுக்குத் தெருவில் ரூ.31.65 கோடி திட்ட மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.74.36 கோடி மதிப்பில் 2 உயர்மட்டப் பாலங்கள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT