சென்னை: "ஈஷா யோகா மையம், ஜக்கி வாசுதேவ் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து, தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இதற்காக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு தலைமையிலான குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "கோவையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வரும் கர்நாடகத்தைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை, தமிழர் ஆன்மிகத்திற்கு எதிராகவும், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம், ஈஷா யோகா மையத்தில் மர்ம மரணங்கள் தொடர்ந்து நடக்கிறது.
தற்போது, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுபஸ்ரீ மரணச் செய்தி வெளியாகியுள்ளது.கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, ஈஷாவுக்கு யோகா பயிற்சிக்கு சென்ற சுபஸ்ரீ, மர்மமான முறையில் மரணமடைந்ததுள்ளார். அவரது மரணம் பெரும் வேதனை ஏற்படுத்தும் அதே நேரத்தில், சுபஸ்ரீயின் மரண தொடர்பான விவகாரத்தில், ஈஷா மீது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகிறது.
அதாவது, ஈஷா யோகா மையத்தில் பல்வேறு மர்ம மரணங்கள் அரங்கேறியுள்ள நிலையில், சுபஸ்ரீயின் மரணத்துக்கு ஜக்கி வாசுதேவும், ஈஷா அறக்கட்டளையும் தான் காரணமாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி சந்தேகிக்கிறது. வனப்பகுதிக்கு மிக அருகிலேயே கட்டடங்கள் எழுப்பியது, நிதி மோசடியில் ஈடுபட்டது, பழங்குடியினரின் நிலத்தை ஆக்கிரமித்தது, ஈஷாவில் தொடரும் மர்ம மரணங்கள், காணாமல் போனவர்கள், நன்கொடை என்ற பெயரில் மோசடி, உரிய விசா பெறாமல், பல வெளிநாட்டு நபர்களும், ஈஷா மையத்துக்குள் தங்கி வருதல், இப்படியான ஏராளமான புகார்கள் ஜக்கி வாசுதேவ் மீது உள்ளது.
எனவே, ஈஷா யோகா மையம், ஜக்கி வாசுதேவ் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து, தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். இதற்காக, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு தலைமையிலான குழுவை அமைத்து, விசாரணை நடத்த வேண்டும். யானை வழித்தடங்களை மறித்து கட்டப்பட்ட சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்களை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.