சென்னை: சேலம் "லீ" பஜார் ஆஞ்சநேயர் கோயில் அருகில் இயங்கிவரும் மதுபானக் கடையை அகற்றக் கோரிய வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சேலம் மாநகர் பகுதியில் உள்ள "லீ" பஜார் மேம்பாலத்தின் கீழே உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலின் தொன்மை வாய்ந்த தூண்கள் பாதுகாப்பற்ற நிலையில் பக்தர்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அபாயகரமாக உள்ளன. இந்தக் கோயிலை ஒட்டியே மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடம் இயங்கி வருகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் புகார் அளித்தேன். அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.