சென்னை: ஐயப்ப பக்தர்களுக்கு கங்கா தீர்த்தம் விற்பனை செய்வதற்காகச் சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் கங்கை புனித நீர் (கங்கா தீர்த்தம்) விற்பனை செய்யும் திட்டம் கடந்த 2016-ம்ஆண்டு தொடங்கப்பட்டது. தீபாவளி, ஆடி அமாவாசை போன்ற விசேஷ தினங்களில் மக்கள் இந்த கங்கை புனித நீரை வாங்கி தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதையடுத்து ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகச் சென்னை, அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்தில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றிலிருந்து கொண்டு வரப்படும் இந்தப் புனித நீர் 250 மி.லிட்டர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், தமிழ்நாடுஇந்து சமய அறநிலையத் துறையுடன் அஞ்சல் துறை இணைந்துபழனி பஞ்சாமிர்த விற்பனையை யும் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அஞ்சல் நிலையங்களில் ரூ.250 செலுத்தி முன்பதிவு செய்தால், அவர்களுக்கு 500 கிராம் எடையுள்ள பஞ்சாமிர்தம், சுவாமி ராஜா அலங்கார படம் மற்றும் 10 கிராம் எடையுள்ள விபூதி ஆகியவை விரைவு தபால் மூலம் அவர்களது வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மேலும், ஒருவர் எத்தனை பிரசாதம் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் என அண்ணா சாலை தலைமை அஞ்சல் நிலையத்தின் தலைமை அஞ்சல் தலைவர் என்.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.