தமிழகம்

வரும் கோடையில் தயிர், மோர், லஸ்ஸி விற்பனையை அதிகரிக்க ஆவின் திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு ஆண்டின் கோடைகாலத்தில் ஆவின் தயிர், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் விற்பனையை 50 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: வரும் கோடைகாலத்தில் ஆவின் தயிர், மோர், லஸ்ஸி மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விற்பனையை மாவட்ட வாரியாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, ஆவின் தயிர், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.

இதற்காக, விழுப்புரம், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 10 ஒன்றியங்களில் ஆவின் மோர்,தயிர், லஸ்ஸி விற்பனையை அதிகரிக்கும் வகையில், பல்வேறு மேம்பாட்டு பணிகளை தொடங்கி உள்ளோம். கோடை காலத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் லிட்டர் அளவுக்கு தயிர், மோர், லஸ்ஸி விற்பனை செய்யப்படும்.

இவற்றை 30 ஆயிரம் லிட்டர் அளவு விற்பனையாக அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளோம். இதுதவிர, சென்னை, மதுரையில் உள்ள ஆலைகளில் தினசரி ஐஸ்கிரீம் தயாரிப்பு அளவை 15 ஆயிரம் கிலோவில் இருந்து 30 ஆயிரம் கிலோவாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT