தமிழகம்

11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள் உட்பட தூங்கும் வசதி பெட்டிகளுடன் 42 வந்தே பாரத் ரயில்கள்: சென்னை ஐசிஎஃப் தயாரிக்கிறது

செய்திப்பிரிவு

சென்னை: தூங்கும் வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரித்து,இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் 42 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா இடையே இயக்கப்படுகின்றன. இதுபோல, அதிநவீன தொழில் நுட்பத்துடன் 4 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, வெவ்வேறு நகரங்கள் இடையே இயக்கப்படுகின்றன.

தற்போது 7-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு, ஹவுரா - நியூ ஜல்பைகுரி இடையே ரயில் சேவை தொடங்கியுள்ளது. 8-வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கும் பணி ஐசிஎஃப்பில் நடந்து வருகிறது. இதற்கிடையே, சென்னை ஐசிஎஃப்பில் தலா 16 பெட்டிகள் கொண்ட தூங்கும் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் ரயிலில் சேர் கார்வசதியுடன், அமர்ந்து பயணிக்கும் இடங்கள் மட்டுமே உள்ளன. எனவே, தூங்கும் வசதி பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்கள்தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லும் வந்தே பாரத்ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகள் உருவாக்கப்பட உள்ளன.

மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஐசிஎஃப் ஆர்டர் பெற்றுள்ளது. இதில் 75 ரயில்கள் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்படும். மற்ற 42 ரயில்களில் தூங்கும் வசதி ஏற்படுத்தப்படும். வந்தே பாரத் ரயிலில் 11 மூன்று அடுக்கு ஏசி பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏசி பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி என மொத்தம் 16 பெட்டிகள் இடம்பெறும்.

ஒரு மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் 61 படுக்கை வசதி இடங்கள், 2 அடுக்கு ஏசி பெட்டியில் 48படுக்கை வசதிகள், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 24 படுக்கைவசதிகள் இருக்கும். இப்பெட்டியில் மாற்றுத் திறனாளி பயணிக்கும் ஒரு இடம் உண்டு. ரயில் பெட்டிஉதவியாளருக்கும் படுக்கையுடன் இடம் ஒதுக்கப்படும்.

SCROLL FOR NEXT