மானாமதுரை: மானாமதுரையில் காங்கிரஸார் இரு கோஷ்டிகளாக கொடியேற்றிய விவகாரம் தொடர்பாக கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காங்கிரஸ் அலுவலகத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். அப்போது நகரத் தலைவர் கணேசன் பேசுகையில், ‘நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமலேயே கார்த்தி சிதம்பரம் எம்.பி. மானாமதுரை நகர் பகுதியில் கட்சிக் கொடியேற்றியுள்ளார்’ என்று கூறினார். இது குறித்து ப.சிதம்பரம் கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்து கொண்டிருந்தார்.
அப்போது சிலர், மானாமதுரை நகரில் நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். இரு தரப்பினரும் தனித்தனியாக கொடியேற்று விழா நடத்துகின்றனர். நாங்கள் யார் நிகழ்ச்சியில் பங்கேற்பது என குழப்பமாக உள்ளது என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து, இரு தரப்பினர் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சிலர் பேசுகையில், கார்த்தி சிதம்பரம் நன்றி சொல்ல தொகுதிக்கு வரவில்லை, கட்சியினரை ஊக்கப்படுத்தவில்லை’ என்று கூறினர். கரோனா காலம் என்பதால்தான் கார்த்தி வரவில்லை என்று சிதம்பரம் கூறினார்.
செய்தியாளர்களிடம் கெடுபிடி: நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாத நிகழ்வுகளை செய்தியாளர்கள் மொபைல் போன் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதை கவனித்த ப.சிதம்பரம், செய்தியாளர்களின் மொபைல் போன்களை வாங்கி பதிவுகளை அழிக்குமாறு கட்சியினரிடம் தெரிவித்தார். அவர்களும் மொபைலை கேட்டு வற்புறுத்தினர். ஆனால் செய்தியாளர்கள் மொபைலை கொடுக்க மறுத்து விட்டனர். இதனிடையே ப.சிதம்பரம் கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்.