திருவள்ளூர் மாவட்டத்தில் நீடித்து வரும் தொடர் மின்வெட்டால் அவதிக்கு ஆளான மக்கள் பல பகுதிகளில் நேற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வங்கக் கடலில் உருவான வார்தா புயல் திருவள்ளூர் மாவட் டம், பழவேற்காடு அருகே கடந்த 12-ம் தேதி கரையைக் கடந்தது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. மேலும் 14,069 மின் கம்பங்களும் 116 மின்மாற்றிகளும் புயலால் சேதமடைந்தன. அதேபோல் 62,088 வீடுகளும், 32,241 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும் நாசமாயின.
மேலும் பழவேற்காடு, திரு வொற்றியூர் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. இதனிடையே புயலால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடந்த 11-ம் தேதி நள்ளிரவு முதல் மின்தடை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சேதமடைந்த மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளை மாற்றும் பணியினை மாவட்ட நிர் வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பணியின் காரணமாக நேற்று முன்தினம் வரை 6,790 மின் கம்பங்கள் மற்றும் 73 மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. சீரமைக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப் பகுதிகளில் மின்தடை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால், மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை நேற்றும் தொடர்ந்தது. மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் சாரம் விநியோகிக்கக் கோரி மறிய லில் ஈடுபட்டனர்.
இதன்படி பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி, புது வாயல் - பெரியபாளையம் சாலை, பொன்னேரி அருகே புலிகுளம், திருவள்ளூர் அருகே வேப்பம் பட்டு, ஆவடி அருகே திருமுல்லை வாயல் உள்ளிட்ட இடங்களில் இந்த மறியல் நடந்தது. இதில் நூற் றுக்கணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். செவ் வாப்பேட்டையில் நடந்த மறிய லில் 13 பேரை போலீஸார் கைது செய்தனர். ஈக்காடு கிராமத்தில் உள்ள பிடிஓ அலுவலகத்தை அப் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து, மக்களை சமாதானப்படுத்தினர். அப்போது அவர்கள், மின்தடை ஏற்பட்ட இடங் களில், சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மாற்றும் பணியை துரிதப்படுத்தி, மின் விநியோகம் நடக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று போராட்டத்தில் ஈடு பட்ட மக்கள் கலைந்து சென்றனர்.