சேலத்தில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியுளள பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள். 
தமிழகம்

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் போராட்டம்: பல மாவட்டங்களிலிருந்து குவிவதால் பரபரப்பு

எஸ்.விஜயகுமார்

சேலம்: பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலத்தில் காத்திருப்பு போராட்டம் தொடங்கியுள்ள நிலையில் பல மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு திரண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சேலத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள் 2400 பேர் நேற்றுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கடும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து செவிலியர்கள் இந்த போராட்டத்தின் பங்கேற்க சேலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களிடம் காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குநர் நளினி பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும் மீண்டும், நிரந்தர ஒப்பந்த பணி வழக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி, செவிலியர்கள் கடும் வெயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT