சென்னை: சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில், தென்னிந்திய அளவில் பல்கலை.களுக்கு இடையிலான மகளிர் ஹாக்கிப் போட்டிகள் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்றன. இதில் 30 பல்கலை. அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் கர்நாடக மாநிலம் மைசூர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கேரள மாநில கோழிக்கோடு பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
இதற்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. சர்வதேச, தேசிய விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என்றார்.
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நேரு விளையாட்டு அரங்கில் ஓட்டப் பந்தயம், மும்முனை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல்உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார். மேலும், தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற மூத்த தடகள வீரர்களுக்கும் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளிர்குழு தயாரிப்புகள்: இந்நிலையில், உதயநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகளிர் சுய உதவிக் குழுவினர், பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். அவற்றுக்கான விற்பனை வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், அந்தப் பெண்களின் பொருளாதாரம் மேம்படும்.
ஆகவே, என்னை சந்திக்க வரும் கட்சியினர் இனிமேல் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் அத்தியாவசியப் பொருட்களை அன்பு பரிசாக வழங்கலாம். இவற்றை ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் காப்பகங்களுக்கு வழங்கப்படும். புத்தகங்கள், கட்சி வேட்டி,துண்டுகளை எப்போதும்போல் வழங்கலாம். ஆனால், பட்டு சால்வை, பூங்கொத்துபோன்றவற்றை அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.