தமிழகம்

புயலால் பாதித்த காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு: நிவாரண நடவடிக்கைக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வார்தா புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறியவும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும் தமிழக அரசு சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விவசாயத்துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், அடிப்படை வசதிகள் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கிய விவரம் குறித்து கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்தும் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் அதிகமாக மரங்கள் விழுந்துள்ளன, மின்கம்பங்கள் விழுந்துள்ளன என்பது குறித்தும் அதனை அப்புறப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் அமைச்சர்கள் தனியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பொதுமக்களை சந்திந்து ஆறுதல் கூறினர். மேலும் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து அவர்களுக்கும் நிவராண உதவிகளையும், விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தினர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி புயலினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புசலால் பாதிக்கப்பட்ட லைட்ஹவுஸ் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, கே.பி. அன்பழகன், விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, மீனவர்கள், நிவாரண உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர்களிடம் முன் வைத்தனர். அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த அமைச்சர்கள், அப்பகுதியில் துரிதமாக மின் விநியோகம் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, பொன்னேரி எம்.எல்.ஏ., சிறுணியம் பலராமன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT