தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றும் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ. 
தமிழகம்

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்: தவாகவினருக்கு வேல்முருகன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: தமிழக வாழ்வுரி மைக் கட்சியினர் மக்களவைத் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான தி.வேல்முருகன் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் கட்சி வளர்ச்சியடைந்துள்ளது. என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து போராடி வருகிறோம். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தவுள்ள பகுதி மக்களுக்காகவும் போராடி வருகிறோம்.

வட மாநிலத்தவர்கள் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க தனி கண்காணிப்புத் துறை ஏற்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளோம். 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து கோயில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும். அரியலூர் விவசாயி மரணத்தில் காவலர்களை கைது செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தோம்.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் மக்களுக்காக குரல் கொடுப்பதிலும், அரசுக்கு எதிராக போராடும் சூழல் நிலவினாலும் எந்த சமரசமும் இன்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சி செயல்படும். மக்கள் பிரச்சினைகளை அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட்டு மக்களவைத் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT