ஜல்லிக்கட்டு போட்டியை தடையின்றி நடத்தும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உரையை வாசித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்தில் இருந்து தமிழக மக்கள் இன்னும் மீளவில்லை. இந்தியாவின் செல்வாக்கு மிக்க மக்கள் தலைவரான ஜெயலலிதா இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு வலுவூட்டியவர். மறைந்த ஜெயலலிதா காட்டிய வழியில் அவரது லட்சியங்கள், திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்த நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களையும், 114 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 1974-ம் ஆண்டு கச்சத் தீவு ஒப்பந்தத்தின்படி அங்கு மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை பெற்றுத்தர வேண்டும். ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தல், பயோமெட்ரிக் அடையாள அட்டை என மீனவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு மத்திய அரசு உதவ வேண்டும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளை மத்திய அரசு வழங்க வேண்டும். இது தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு விடுத்துள்ளது. இதனை கவனத்தில் கொண்டு மாநிலங்களின் நலன்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
ஜல்லிக்கட்டு போட்டியை தடையின்றி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. ராணுவத்துக்குச் சொந்தமான நிலங்களை எடுக்கும்போது அதன் மதிப்புக்கு இணையான நிலத்தை கொடுக்க வேண்டியுள்ளது. ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தை எடுக்கும்போது சந்தை மதிப்பில் 99 சதவீத விலையை கொடுக்க வேண்டியுள்ளது.
ஆனாலும் 35 ஆண்டு குத்தகைக்கு மட்டுமே கிடைக்கிறது. இதுபோன்ற இடையூறுகளைக் களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் நிலத்துக்காக மாநில அரசுகள் வழங்கும் தொகையை திட்டத்தின் மதிப்பில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.