மிலாது நபி திருநாளையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் வித்யாசாகர் ராவ்: கடும் உழைப்பு, நல்ல செயல்கள் மற்றும் எளிமையான வாழ்க்கை வாழுமாறு முகமது நபிகள் வலியுறுத்தியுள்ளார். அவரது கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் நல்லிணக்கம், மகிழ்ச்சி பெருகி சிறந்த வாழ்க்கை அனைவருக்கும் மலரட்டும். முகமது நபிகளின் பிறந்த நாளான மிலாது நபி புனித திருநாளில் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதல்வர் பன்னீர்செல்வம்: இறைத்தூதர் நபிகள் நாயகம் இவ்வுலகுக்கு எடுத்துரைத்த உயரிய போதனைகளான, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, அண்டை அயலாரிடம் நட்புறவுடன் இருப்பது, ஏழை எளியோருக்கு உணவளிப்பது போன்றவற்றை மக்கள் மனதில் நிலைநிறுத்தி உண்மையுடனும், கருணையுடனும் வாழ்ந்தால், உலகில் அன்பும், அறமும் மனிதநேயமும் தழைத்தோங்கும். மிலாது நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி: நபிகள் பெருமான் எளிமையாக வாழ்ந்து, இனிமையாக வாழ வழிகாட்டியவர். ஏழைகளின் நிலை உணர்ந்து அவர்களுக்காக இரங்கியவர். அண்ணல் நபிகளின் போதனைகள் உயரிய மனிதப் பண்புகளுடன் வாழ மக்களுக்கு வழி காட்டுபவையாகும். இத்தகைய, நபிகளின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எனது உளமார்ந்த மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துகள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இன்று தமிழ்நாட்டின் சமூக சீர்கேட்டுக்கு மதுவே காரணமாக இருக்கிறது. மதுவைத் தவிர்ப்போம், முற்றாக அகற்றுவோம் என்று உறுதிகொள்ள வேண்டிய நாள் மிலாது விழா நாளாகும். தமிழ்நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக சார்பில் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்துக்கு வேண்டும் என்ற தத்துவத்தை போதித்த நபிகள் நாயகம், அதை தன் வாழ்விலும் கடைப்பிடித்தார். அவர் கற்பித்த போதனைகளை நம் வாழ்வில் கடைபிடிக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று கூறி வாழ்த்துகிறேன்.
ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர்: அன்பு, கருணை, ஈகை ஆகியவை சொர்க்கத்தின் திறவுகோல் என்றுரைத்த நபிகள் நாயகம் பிறந்த இந்நன்னாளில், இஸ்லாமியர்கள் அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.