குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிசம்பர் 9 முதல் தொடங்க உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு (பொது) அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு நாடும் அனைவரும் பயன்பெறும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் குரூப் 1-ல் அடங்கியுள்ள 85 காலிப்பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 9-ம் தேதி முதல் நடக்கிறது.
இப்பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணிவரை, சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவலக மூன்றாம் தளத்தில் நடக்கிறது. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வேலை வாய்ப்பு பதிவு அட்டை, உரிய கல்விச் சான்றுகளுடன் டிசம்பர் 8-ம் தேதிக்குள் வேலை நாட்களில் நேரில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.