'வார்தா' புயலால் பாதிக்கபட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் வாரியத்துக்கு டிசம்பர் 12-ம் தேதி முதல் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையை வரும் 31-ம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம்' என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.சாய்குமார் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் தங்கமணி கூறும்போது, "'வார்தா' புயலால் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் மின்விநியோகக் கட்டமைப்புகள் சேதமடைந்து மின்விநியோகம் முழுமையாக பாதிக்கப்பட்டது. 670 மின்மாற்றிகள் மற்றும் 4 ஆயிரத்து 500 மின் பகிர்மானப் பெட்டிகள், 54 உயரழுத்த மின் கோபுரங்கள் சுமார் 29 ஆயிரத்து 907 மின் கம்பங்கள், 15 ஆயிரம் கி. மீ. நீளத்திலான மின் கம்பிகள் சேதமடைந்தன என கணக்கிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மின்விநியோகத்தை சீரமைக்கும் பணியில் ஆந்திர மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட மின் பணியாளர்கள் உட்பட 14 ஆயிரத்து 700 மின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுவதற்கு தேவையான மின்தளவாடங்கள் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இரவு பகலாக நடைபெற்ற பணிகள் காரணமாக சுமார் வீட்டு இணைப்பிற்காக 15 ஆயிரம் மின் கம்பங்கள் மற்றும் 370 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான மீதமுள்ள மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகரப் பகுதிகளில் குறைந்த மின்னழுத்த நுகர்வோர்களுக்கு முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் குறைந்த மின்னழுத்த நுகர்வோர்களுக்கு முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் சீரமைப்பு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மின் விநியோகம் வழங்கப்படாத அனைத்து பகுதிகளுக்கும் இரு தினங்களுக்குள் மின்சாரம் வழங்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டுவரும் 17 மின்வழி தடங்களில் உள்ள 54 உயரழுத்த மின் கோபுரங்கள் சேதமடைந்தன. இதில், 21 உயரழுத்த மின் கோபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. மின் வழித்தடங்களின் உள்ள உயர் மின்னழுத்த கோபுரங்கள் சீரமைக்கும் பணிகள் இரண்டு தினங்களுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின்சாரம் முழுமையாக வழங்கப்படும்.
'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் வாரியத்துக்கு டிசம்பர் 12-ம் தேதி முதல் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தொகையை வரும் 31-ம் தேதி வரை அபராதமின்றி செலுத்தலாம்" என்றார் அமைச்சர் தங்கமணி.