தமிழகம்

மின் தடையால் தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி

செய்திப்பிரிவு

வார்தா புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்து வயர்கள் அறுந்து கிடப்பதால் வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த மின்கம்பங்களையும் அறுந்து கிடக்கும் மின்சார வயர்களையும் சீரமைக்கும் பணியில் மின்துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை நகரில் வீடுகளுக்கு ஓரளவு மின்இணைப்பு கொடுக்கப்பட்டாலும் புறநகர் பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின்சார பிரச் சினை இன்னும் சரிசெய்யப்படவில்லை. தற்போது, பள்ளி மாணவர்களுக்கு குறிப்பாக பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகளும், அதேபோல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வருவதால் மின்சாரம் இல்லாததன் காரணமாக அவர்கள் படிக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுநாள் வரையில் மின்விளக்கில் படித்துவிட்டு திடீரென மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்க வேண்டியிருப்பதால் சில மாணவர்களுக்கு கண்வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். எனவே, மின்சார வாரியம் போர்க்கால அடிப்படையில் சென்னை புறநகர் பகுதியிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் வீடுகளுக்கு மின்சார வசதி கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கிறார்கள்.

SCROLL FOR NEXT