தமிழ் இலக்கிய உலகில் மொழி பெயர்ப்பாளர்கள் போதிய அளவு இல்லாததால், தமிழ் இலக்கிய படைப்புகள் உலக அளவில் சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என பொள்ளாச்சி இலக்கிய வட்ட நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், மாதந்தோறும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 44-வது இலக்கிய சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் பொள்ளாச்சி இலக்கிய வட்டச் செயலாளர் கவிஞர் ரா.பூபாலன் வரவேற்றார். பொள்ளாச்சி அபி எழுதிய, ‘எங்கேயும் எப்போதும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராஜா அறிமுகம் செய்தார். கவிஞர் நித்யா எழுதிய ‘எங்களுக்கானவை’ என்ற கவிதைத் தொகுப்பு நூலை கவிஞர் ஆன்டன் பெனியும், கவிஞர் சரவணா எழுதிய ‘முதுகெலும்பி’ வாழ்வியல் தொடர் நூலை கவிஞர் முகமது அலி ஜின்னாவும், கவிஞர் கவிஜி எழுதிய ‘நிழல்தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்’ என்ற கவிதைத் தொகுப்பு நூலை கவிஞர் மு.அறவொளியும் அறிமுகம் செய்து வைத்தனர். 15-க்கும் மேற்பட்ட கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கமும் நடைபெற்றது.
மக்கள்கவி ‘இன்குலாப்’பின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் செங்கவி, ‘போராடும் இயக்கங்களுக்கு நெருக்கமாக மக்களைக் கொண்டு சேர்க்கும் விதத்தில் இன்குலாப் பின் படைப்புகள் அமைந்திருந்தன. பருந்தை எதிர்க்கும் தாய் பறவை பயங்கரவாதியா? என கேள்வி எழுப்பிய போராளியாக இன்குலாப் திகழ்ந்தார்’ என்றார்.
எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா பேசியதாவது: சிறுகதையில், எடுப்பு, தொடுப்பு, முடிப்பு இருந்தால் மட்டுமே அது சிறுகதை என்ற வடிவத்தை பெறும். அதுவே வாசகரை கைப்பிடித்து கதைக்குள் அழைத்து செல்லும். சிறுகதையில் குறைந்த கதாபாத்திரங்களே இருக்க வேண்டும். சமகால சிறுகதைகளில் வரும் மாய யதார்த்தவாதம், பின்நவீனத்துவம் ஆகியவை புதிதல்ல. பாட்டிகள் சொல்லிக் கொடுத்த கதைகளிலேயே அதன் கூறுகள் இருப்பதை காணலாம். தற்போதைய கால கட்டத்தில், தமிழ் மொழியில் இலக்கிய மொழி பெயர்ப்பாளர்கள் குறைவு. இது தமிழ் படைப்பாளிகளின் படைப்புகள் உலக அளவில் சென்றடைவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றார்.