பரங்கிமலையில் முதல்நிலை ஆயுதப்படை பிரிவு காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் முதல் நிலை காவலராக பணி செய்து வந்தவர் கோபிநாத் (23). திருமணம் ஆகாத இவர் நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படை வளாகத்தில் பணியில் இருந்தார். அவர் பணியில் இருந்த இடத்தில் இருந்து நேற்று காலை 5.30 மணிக்கு திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது முதல்நிலை காவலர் கோபிநாத், தலையில் ரத்தம் வடிந்த நிலையில், நாற்காலியில் இறந்து கிடந்தார். இது குறித்து உடனே போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கோபிநாத் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாற்காலியில் அமர்ந்தபடியே அவர் இறந்துள்ளார்.
இதுகுறித்து, பரங்கிமலை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீஸார், கோபிநாத் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, பரங்கிமலை போலீஸார் கூறும்போது, “கோபிநாத்தின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சோழவந்தான் முள்ளிப்பள்ளம். 2013-ல் பணியில் சேர்ந்த இவர், தூத்துக்குடி காவலர் பயிற்சி மையத்தில் போலீஸ் பயிற்சியை முடித்துள்ளார். பின்னர் பழனி பட்டாலியனில் பணி அமர்த்தப்பட்டார். சில தினங்களுக்கு முன்னர் மதுரையில் இருந்து பரங்கிமலை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தலை வலிப்பதாக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே, அவர் பணிப்பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? உயர் அதிகாரிகள் எவரேனும் மன அழுத்தம் கொடுத்தார்களா? தற்கொலைக்கு குடும்ப விவகாரம் காரணமா? என விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.