தமிழகம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 5-வது நாளாக மின் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

செய்திப்பிரிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் 5-வது நாளாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் கடந்த 12-ம் தேதி கரையைக் கடந்த ‘வார்தா’ புயல் 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. தரைக்கு அடியில் மின்கம்பிகள் செல்லும் சென்னை மாநகரப் பகுதியில் மட்டும் மின் விநியோகம் சீரடைந்துள்ளது. புயல் தாக்கி இன்று 5 நாட்கள் ஆகும் நிலையில், மற்ற இடங்களில் இன்னமும் மின்சாரம் வழங்கப்படவில்லை. குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதி களான கொளத்தூர், பெரியார் நகர், கொரட் டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பள்ளிக் கரணை, மேடவாக்கம், குரோம்பேட்டை, சோழிங்க நல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், குன்றத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை இன்னும் சீரடையவில்லை.

“சென்னையில் 90 சதவீத இடங்களில் மின் விநியோகம் சீரடைந்துவிட்டது. ஓரிரு நாளில் 100 சதவீத அளவுக்கு மின் விநியோகம் செய்யப்படும்” என்று அமைச்சரும், மின் வாரிய அதிகாரிகளும் கூறிவருகின்றனர். ஆனால், உண்மை நிலைமை நேர்மாறாக உள்ளது. புறநகர் பகுதிகளில் பல இடங்களில் உடைந்த மின்கம்பங்கள், அறுந்த கம்பிகளுக்கு பதிலாக புதிய கம்பங்கள், கம்பிகள்கூட இன்னும் கொண்டுவரப்படவில்லை.

புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நிலைமை சீரடைய அதிக முயற்சி தேவைப்படும் என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர். அதனால்தான், 4 நாட்களாக மின்சாரம் இல்லாமல் இருந்தாலும்கூட, சிறிதுகூட தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். ஆனால், மின் விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன, எப்போது மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றுகூட தெரிவிக்காமல் இருப்பதுதான், மக்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு

எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாததால், மக்கள் எந்த வேலையையும் திட்டமிட்டு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மோட்டார் போடாமல் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் பலரும் வீடுகளைப் பூட்டிவிட்டு, உறவினர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். மின்தடையால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஒரு கேன் குடிநீர் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுபற்றி கேட்டதற்கு மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

புயலால் சேதம் அடைந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கம்பிகள், துணைமின் நிலையங்களை சீரமைக்கும் பணியில் கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப் பட்டு போர்க்கால அடிப்படையில் வேலைகள் நடந்து வருகின்றன. தரைவழி மின்கேபிள்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் மின்விநி யோகம் உடனடியாக சீரமைக்கப்பட்டது. தற்போது உயர் மின்கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து வருகிறோம். பணி முடிந்த இடங்களில் இயன்றவரை உடனுக்குடன் மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்

SCROLL FOR NEXT