தமிழகம்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பெண் வழக்கு - விசாரணை 26-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, சென்னை எழும்பூர் பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.கீதா தாக்கல் செய்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது குடும்பமும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குடும்பமும் நெருங்கிய தொடர்பில் இருந்தது. ஜெயலலிதா அழைப்பின்பேரில் கடந்த 1992 முதல் அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறேன். சசிகலா தலையீட்டால் ஜெயலலிதாவை எங்களால் எளிதாக சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதா இப்போது உயிருடன் இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மரணத்தையும் நம்ப முடியவில்லை.

ஜெயலலிதா எதற்காக அப் போலோவில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக அங்கு அவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. தமிழக, கேரள ஆளுநர்களைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை. மருத்துவ மனையிலும் சசிகலா மட்டுமே அவருடன் இருந்து வந்துள்ளார். எனவே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம், சந்தேகம் உள்ளது.

போயஸ் தோட்டத்துக்குள் ஒரு சாதாரண உதவியாளராகத்தான் சசிகலா வந்தார். ஆனால் சசிகலாவின் கூண்டுக்குள் அடைபட்ட கிளியாக ஜெயலலிதா உள்ளார் என அவரது அண்ணன் குடும்பத்தாரே என்னிடம் கூறியுள்ளனர். என்னுடைய தோழி ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்வும் சசிகலாவால் முடிவுக்கு வந்துள்ளது.

சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவின் புகைப்படங் களையோ, வீடியோ ஆதாரங் களையோ ஏன் வெளியிடவில்லை? எதற்காக மற்றவர்கள் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது? எதற்காக அவரை வெளிநாடு அழைத்துச் சென்று உயர்தர சிகிச்சை அளிக்கவில்லை? ஜெயலலி தாவைப் பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்களைக்கூட அனுமதிக் காதது ஏன்?

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கும் முன்பாக ரத்த உறவுகளிடம் கையெழுத்து பெற வேண்டும் என்பதும், மரணம் குறித்து தெரி விக்க வேண்டும் என்பதும் மருத்துவ மனைக்கு தெரியாதா? ரிச்சர்டு பீலே எதற்காக வரவழைக்கப்பட்டார்? இறப்பதற்கு முன்பாகவே அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறந்தது எப்படி? முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அவசரம் அவசரமாக பதவி ஏற்றது ஏன்? அவரது உடலை அடக்கம் செய்ய சந்தனப்பேழை உடனடியாக வந்தது எப்படி?

மருத்துவமனைக்குள் என்ன நடந்தது என்பது கண்டிப்பாக சசிகலா குடும்பத்தினருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தெரியும். மருத்துவமனை வெளியிட்ட அறிக் கைகளில் முரண்பாடு உள்ளது. ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரிக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவுமே அவரைப் பற்றிய எந்த விவரமும் வெளியே வராமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், அதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதியவும், உயர் அதிகாரிகள் பிரமாண வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும், செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை போயஸ் தோட்டம் மற்றும் அப்போலோ மருத்துவமனைக்குள் இருந்த சிசிடிவி பதிவுகளை பாது காக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

வி.கே.சசிகலா, எம்.நடராஜன், ஜே.இளவரசி, டாக்டர் பிரதாப் ரெட்டி, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநரின் முதன்மைச் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் ஆர்.வெங்கடேஷ், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், எஸ்.பூங்குன்றன், டாக்டர் சிவக்குமார், சி.ஆர்.சரஸ்வதி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையர் எஸ்.ஜார்ஜ், ஆயிரம் விளக்கு போலீஸ் ஸ்டேஷன் ஆய்வாளர், கீழ்ப்பாக்கம் வின்சென்ட் பார்க்கர், மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை ஆகிய 20 பேர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சி.சந்திரன் முன்பு நேற்று நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார். வழக்கு விசாரணை டிசம்பர் 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT